கனடாவில் கோல்டி பிராரை பிடிக்க தகவல் கொடுப்பவருக்கு ரூ.1.63 கோடி பரிசு...!

 

 

கனடாவில் அதிகம் தேடப்படும் 25 குற்றவாளிகள் அடங்கிய பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த கோல்டி பிரார் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார். அவரைப் பற்றிய தகவல்களை அளித்து கைது செய்ய உதவுபவர்களுக்கு 2.50 லட்சம் கனடா டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.63 கோடி) வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சதிந்தர்ஜீத் சிங் என்ற கோல்டி பிரார், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இவர் இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பு, கோல்டி பிராரை மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது. மேலும், அவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.9 கோடி) வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்த நிலையில், கனடாவின் 'போலோ' (BOLO) திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 25 முக்கிய தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் கோல்டி பிரார் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார். அவரைக் கைது செய்ய உதவும் தகவல்களை அளிப்பவர்களுக்கு 2.50 லட்சம் கனடா டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி கனடாவின் வின்னிபெக் நகரில் சுக்தூல் சிங் கில் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கோல்டி பிராரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கொலை மற்றும் கொலைச்சதி தொடர்பாக கோல்டி பிரார் மற்றும் கரண்பீர் சிங் ஆகியோருக்கு எதிராக 2024-ம் ஆண்டு கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. இதுவரை இருவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கிலும் கோல்டி பிரார் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கு கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது