குட் நியூஸ்! இனி கண் தானத்திற்காக காத்திருக்கத் தேவையில்லை... மீன் செதில்களில் இருந்து செயற்கை கருவிழி - ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் சாதனை!
மாட்ரிட்: விழித்திரை மற்றும் கருவிழி பாதிப்பால் கண்பார்வை இழந்தவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில், கெண்டை மீன் செதில்களில் இருந்து செயற்கை கருவிழிகளை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் கருவிழி பாதிப்பால் பார்வை இழந்த கோடிக்கணக்கான மக்கள் கண் தானத்திற்காகக் காத்திருக்கின்றனர். மனிதக் கண்களின் கருவிழி கிடைப்பதில் உள்ள தட்டுப்பாட்டைப் போக்க, ஸ்பெயினின் கிரனாடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
மீன் செதில்கள் ஏன்?
மீன் செதில்களில் மனிதக் கண்களுக்குத் தேவையான உயர்தர 'கொலாஜன்' புரதம் அதிகளவில் உள்ளது. மீன் செதில்களில் உள்ள கால்சியத்தை நீக்கிவிட்டு, அதைப் பதப்படுத்தும்போது அது மனிதக் கருவிழியைப் போலவே ஒளியைத் துல்லியமாக ஊடுருவச் செய்யும் தன்மையைப் பெறுகிறது. மற்ற விலங்குகளின் திசுக்களை விட, மீன் செதில்களில் இருந்து எடுக்கப்படும் திசுக்களை மனித உடல் எளிதாக ஏற்றுக் கொள்கிறது.
விலங்குகளிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில், இந்தச் செயற்கை கருவிழிகள் ரத்த நாளங்கள் இல்லாத கருவிழிப் பகுதிகளில் மிகச் சிறப்பாகச் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. தையல் போடத் தேவையில்லாத அளவுக்கு இவை மிக மெல்லியதாகவும், உறுதியாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலப் பலன்கள்:
விலையுயர்ந்த மற்ற செயற்கை கருவிழிகளை விட, மீன் செதில்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த கருவிழிகள் மிகக் குறைந்த செலவிலேயே கிடைக்கும். கண் தானத்திற்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியத்தை இது குறைக்கும். எதிர்காலத்தில் கண் அறுவை சிகிச்சைகளை மிக எளிமையாகவும், வேகமாகவும் மேற்கொள்ள இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ள இந்த ஆராய்ச்சி, விரைவில் மனிதர்களுக்கான மருத்துவப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.