குட் நியூஸ்... மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான இலவசப் பேருந்து பயண அட்டைத் திட்டத்தின் கீழ், மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
2026-27-ஆம் கல்வியாண்டிற்கான இந்தப் பயண அட்டை பெறுவதற்கு மாணவர்களின் சுயவிவரங்கள், புகைப்படம் மற்றும் விருப்பம் குறித்த விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்கனவே அக்டோபர் 10-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
பல பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விவரங்களைப் பதிவேற்றம் செய்யக் கூடுதல் அவகாசம் கோரியதை ஏற்று, தற்போது வருகிற நவம்பர் 20-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். எனவே, விடுபட்ட மாணவர்களின் விவரங்களை உரிய காலக்கெடுவிற்குள் எமிஸ் தளத்தில் துரிதமாகப் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.