குட் நியூஸ்... இந்தியாவின் முதல் பறவைக் காய்ச்சல் தடுப்பு மருந்து... நாளை நாட்டிற்கு அர்ப்பணிப்பு

 

இந்தியாவில் கோழிகளைப் பறவை காய்ச்சல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் H5N1 வைரஸ் தடுப்பூசி நாளை நவம்பர் 20-ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐசிஏஆர் - தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தத் தடுப்பூசியை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், H5N1 வைரஸின் Clade 2.3.2.1a வகையை எதிர்கொள்ளும் வகையில் செயலிழக்கச் செய்யப்பட்ட தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

பறவை காய்ச்சல் பாதிப்பால் கோழிகள் உயிரிழப்பதுடன், நோய் பரவலைத் தடுக்க பண்ணைகளில் கோழிகள் அழிக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கின்றனர்.இந்நிலையில், புதிய தடுப்பூசி கோழிப் பண்ணைத் தொழிலில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது