குட் நியூஸ்... இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி 'QDENGA'!

 

இந்தியாவில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், ஜெர்மனியின் 'டகேடா ஜி.எம்.பி.எச்.' நிறுவனம் தயாரித்துள்ள 'கியூடெங்கா' (QDENGA) எனப்படும் டெங்கு டெட்ராவேலண்ட் தடுப்பூசியை இறக்குமதி செய்து சந்தைப்படுத்த கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்தது.

இந்தியாவில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள முதலாவது தடுப்பூசி இதுவாகும். பல்வேறு அறிவியல் மதிப்பீடுகளுக்குப் பிறகே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசி 4 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்குச் செலுத்த ஏற்றது. இதன் செயல்திறனை உறுதி செய்வதற்காகப் பிரேசில், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களிடம் 3 கட்டங்களாக டெங்கின் 4 வகைகளிலும் இந்த ஆய்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஏற்கனவே ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 42 நாடுகளில் ஒப்புதல் பெற்றுள்ள இத்தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பின் முன் தகுதியையும் பெற்றுள்ளது. உலகளவில் இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இத்தடுப்பூசியை விநியோகிக்கும் உரிமையை ஐதராபாத்தைச் சேர்ந்த 'டாக்டர் ரெட்டிஸ் லேபரிட்டரிஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது.

எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள், அதாவது ஆண்டின் முதல் பாதியில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதன் விலை குறித்த விவரங்கள் இப்போதைக்கு வெளியிடப்படவில்லை.