குட் நியூஸ்... இந்தியாவில் அறிமுகமானது 7 நிமிடங்களில் செயல்படும் நுரையீரல் புற்றுநோய் ஊசி!
இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குக் மிகக் குறுகிய காலத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், 'அடெசோலிசுமாப்' (Atezolizumab) என்ற புதிய அதிநவீன இம்யூனோதெரபி (Immunotherapy) ஊசி சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் இந்த மைல்கல் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சைகான நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளுக்கு வழக்கமாக நரம்பு வழியாக (Intravenous - IV) மருந்து செலுத்தப்படும் போது, அந்தச் சிகிச்சை முறை முழுமையடையச் சுமார் 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் (ஒரு மணி நேரம்) வரை ஆகும். இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் மருத்துவமனையிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.
ஆனால், தற்போது அறிமுகமாகியுள்ள இந்த புதிய இம்யூனோதெரபி ஊசியை உடலின் தோலுக்கு அடியில் (Subcutaneous) செலுத்துவதன் மூலம், வெறும் 7 நிமிடங்களிலேயே ஒட்டுமொத்த சிகிச்சையையும் எளிதாக முடித்துவிட முடியும். இது நோயாளிகளின் உடல் ரீதியான அசதியைக் குறைப்பதோடு, மருத்துவமனைகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் இந்த 'அடெசோலிசுமாப்' மருந்தின் ஒரு டோஸ் விலை (Single Dose Price) சுமார் ரூ.3.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விலை சற்றே அதிகமாக இருந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் மற்றும் எளிமையான முறையில் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால், தீவிரப் புற்றுநோய் பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு இந்த 7 நிமிட ஊசி முறை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.