குட் நியூஸ்... போரூர் - வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கி இறுதி ஆய்வு!
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான சோதனைப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போரூர் முதல் வடபழனி வரையிலான உயர்மட்டப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தலைமையிலான குழுவினர் ஆய்வைத் தொடங்கியுள்ளனர். நேற்று முன் தினம் தொடங்கிய ஆய்வு நேற்றும் நடைபெற்றது. தண்டவாளங்களின் உறுதித்தன்மை, சிக்னல் தொழில்நுட்பம் மற்றும் உயர்மட்ட மின்பாதை (OHE) ஆகிய பணிகள் தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளின்படி அமைந்துள்ளதா என்பதை இக்குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று தேனாம்பேட்டையில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ரயில்களை இயக்கி, அதன் செயல்பாடுகள் துல்லியமாக உள்ளனவா என்பது பரிசோதிக்கப்பட உள்ளது. கடந்த முறை இந்த வழித்தடத்தில் ஆய்வு நடந்தபோது, சில பாதுகாப்பு வசதிகள் பயணிகளுக்குத் திருப்திகரமாக இல்லை என்று பாதுகாப்பு ஆணையர் சுட்டிக்காட்டியிருந்தார். அந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் தற்போது முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, அதன் பிறகே இந்த இறுதி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இரண்டு நாள் ஆய்வின் முடிவில், பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தனது அறிக்கையை இந்திய ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையின் அடிப்படையில், வாரியம் முறையான 'பாதுகாப்புச் சான்றிதழை' வழங்கும். இந்தச் சான்றிதழ் கிடைத்தவுடன், வெகு விரைவில் போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரயில் பயணிகள் போக்குவரத்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும்போது, போரூர் பகுதியில் இருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பயண நேரம் வெகுவாகக் குறையும்.