குட் நியூஸ்... பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வாய்ப்பு - தமிழக அரசு மதிப்பீடு!
வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்குவது குறித்துத் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
மின் வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 2.75 லட்சம் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
வழக்கம் போல 8.33 சதவீத மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை சேர்த்து மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டால், ஒரு பணியாளருக்கு ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை கிடைக்கும்.
இந்த 20 சதவீத போனஸை வழங்குவதற்காக தமிழக அரசுக்கு தோராயமாக ரூ.385 கோடி முதல் ரூ.386 கோடி வரை செலவாகும் என நிதித்துறை மதிப்பீடு செய்துள்ளது.
பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், விரைவாகப் போனஸ் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசின் நிதிநிலை மற்றும் கோரிக்கைகளைப் பொறுத்து கூடுதல் போனஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.