குஷியில் ‘குடி’மகன்கள்... இன்று முதல் ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு - இணையதள சேவை அறிமுகம்!
தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பாட்டிலுக்கு அதிகமாக பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இந்நிலையில் இதனைத் தடுக்கவும், நுகர்வோர் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும் ஆன்லைனில் மதுபான முன்பதிவு செய்யும் வசதியை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் tasmace2e.in என்ற புதிய பிரத்யேக இணையதளம் இதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் லாக்-இன் செய்யும் நுகர்வோர் முதலில் 21 வயதைக் கடந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழகத்திலுள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள மது வகைகள் மற்றும் அவற்றின் இருப்பு நிலவரத்தை (ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் புதுப்பிக்கப்படும்) பயனர்கள் அறிய முடியும்.
அதே சமயம் நுகர்வோர், தாங்கள் விரும்பிய மது வகையைத் தேர்வு செய்து வீட்டிலிருந்தபடியே கட்டணம் செலுத்தியவுடன், QR குறியீட்டுடன் கூடிய ரசீதும், குறிப்பிட்ட கடைக்குச் செல்வதற்கான கூகுள் மேப் வழிகாட்டுதலும் வழங்கப்படும். முன்பதிவு செய்த டாஸ்மாக் கடையில் QR குறியீட்டைக் காண்பித்து, கூடுதல் கட்டணமின்றி சரியான MRP விலையிலேயே மதுபானங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைனில் மது முன்பதிவு செய்யும் திட்டம் சமூகத்திற்கு பெரும் ஆபத்தானது என்றும், இது மதுப்புழக்கத்தை எளிதாக்கும் பிற்போக்கான முயற்சி என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்குப் பதிலாக இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்த்து, இந்த முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.