திண்டிவனம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்; பயணிகள் கடும் அவதி!

 

திண்டிவனம் அருகே சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி நேற்று மாலை சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த ரயில் விழுப்புரம் மாவட்டம், ஓலக்கூர் ரயில் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் தண்டவாளத்தை விட்டு விலகி திடீரென தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதை அறிந்த ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரக்கு ரயில் தடம் புரண்டதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே உள்ள இடைநிலை ரயில் நிலையங்களில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டன.

முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் பலவும் பாதி வழியிலேயே நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டதால், கோடைக்காலப் பயணத்தை மேற்கொண்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்டவாளத்தில் இருந்து விலகிய சரக்கு ரயிலின் பெட்டிகளை அகற்றும் பணியிலும், சேதமடைந்த தண்டவாளப் பகுதியைச் சரி செய்யும் பணியிலும் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.