சென்னை பிளிங்கிட் ஸ்டோரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு... மேலாளர் உட்பட 4 பேர் கைது!

 

சென்னை ராயப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த பிளிங்கிட் ஸ்டோரிலிருந்து சி.சி.டி.வி. ஹார்ட் டிஸ்க், புளூடூத் ஹெட்செட்கள், இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகள் உள்ளிட்ட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடிச் சென்றதாக ஸ்டோர் மேலாளர் மற்றும் முன்னாள் ஊழியர்கள் என 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராயப்பேட்டையில் உள்ள பிளிங்கிட் ஸ்டோரில் விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் மற்றும் சி.சி.டி.வி. பதிவுகளைக் கொண்ட ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாகப் புகார் எழுந்தது. இதையடுத்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த ஸ்டோரின் மேலாளரான ஸ்ரீகாந்த் (22), அதே நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சிவகுமார் (26), ஸ்ரீதரன் (26) மற்றும் ராகேஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீகாந்த் உள்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தடயங்களை மறைக்கும் நோக்கில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகளும் திருடப்பட்டதா அல்லது அவற்றிலும் விவரங்கள் சிக்கியுள்ளனவா என்பது குறித்துக் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருடப்பட்ட புளூடூத் ஹெட்செட்கள், இயர்பட்ஸ், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் பிற பொருட்களைப் பதுக்கி வைத்துள்ளனரா அல்லது விற்பனை செய்துள்ளனரா எனக் கண்டறிந்து அவற்றை மீட்கும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.