நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் கூகுள்.. இந்தியாவில் 2023ல் இருந்து பயன்பாட்டில் இருக்கு!
வெனிசுலாவில் நேற்று ஏற்பட்ட மிகக் கொடூரமான இரட்டை நிலநடுக்கப் பேரழிவைத் தொடர்ந்து, உலகளவில் நிலநடுக்க எச்சரிக்கை அமைப்புகளின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்துப் பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. இத்தகையச் சூழலில், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பொதுவாக நிலநடுக்கத்தைக் கண்டறியப் பெரிய அளவிலான நில அதிர்வு மானிகள் தேவைப்படும். ஆனால், கூகுள் நிறுவனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களையே சிறிய அளவிலான நில அதிர்வு மானிகளாக மாற்றியுள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ளமைக்கப்பட்ட 'முடுக்கமானி' எனப்படும் சென்சார்கள், நிலநடுக்கத்தின் போது ஏற்படும் ஆரம்பக்கட்ட மிக நுண்ணிய அதிர்வுகளை உடனடியாகக் கண்டறியும் திறன் கொண்டவை. இந்தச் சென்சார்கள் அதிர்வை உணர்ந்த உடனே, அந்தத் தகவலைக் கூகுளின் 'ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்புக்கு' மின்னல் வேகத்தில் அனுப்பி வைக்கின்றன. தவறான எச்சரிக்கைகளைத் தவிர்ப்பதற்காகக் கூகுள் ஒரு கூட்டுத் தரவு முறையைப் பயன்படுத்துகிறது.
ஒரே குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பலதரப்பட்ட ஆண்ட்ராய்டு கைபேசிகளிலிருந்து ஒரே நேரத்தில் இத்தகைய நுண் அதிர்வு சமிக்ஞைகள் கூகுள் சர்வரை சென்றடைந்தால், அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது கணினி மூலம் உடனடியாக உறுதி செய்யப்படுகிறது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மற்றும் அதன் தீவிரத்தைக் கணக்கிட்டு, அடுத்த சில நொடிகளில் அந்தப் பகுதியில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் 'அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்த உயிர்காக்கும் எச்சரிக்கை தொழில்நுட்பமானது உலக அளவில் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த சேவை இந்தியாவில் தற்போதும் தங்கு தடையின்றிச் செயல்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தின் முதன்மை அலைகள் தாக்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்பே இந்த எச்சரிக்கை சத்தம் மொபைல்களில் ஒலிப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் தப்பிச் செல்ல இந்தத் தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.