Google Gemini-யில் பெரிய மாற்றம்! ‘Gems’க்கு பதிலாக வரும் ‘Skills’ - நவ.17 முதல் புதிய வசதி
Google Gemini செயற்கை நுண்ணறிவு சேவையில் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனிப்பயனாக்கப்பட்ட ‘Gems’ வசதியில் முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கு மாற்றாக ‘Skills’ என்ற புதிய வசதியை Google அறிமுகப்படுத்தி வருகிறது.Gemini-யில் குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ப தனிப்பட்ட வழிமுறைகளை உருவாக்கி, அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு ‘Gems’ வசதி உதவி வந்தது. தற்போது இதேபோன்ற தனிப்பயனாக்கப்பட்ட வழிமுறைகளை இன்னும் எளிதாக பயன்படுத்தும் வகையில் ‘Skills’ வசதியை Google கொண்டு வருகிறது.
‘Skills’ மூலம் பயனர்கள் தங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் வழிமுறைகளை ஒருமுறை உருவாக்கி சேமித்து வைத்துக்கொள்ள முடியும். பின்னர் ஒவ்வொரு முறையும் நீண்ட Prompt-ஐ டைப் செய்யாமல், தேவையான Skill-ஐ தேர்வு செய்து பயன்படுத்தலாம்.இதில் முக்கியமான வசதி என்னவென்றால், Gemini உரையாடலின்போது / என டைப் செய்து, தேவையான Skill-ஐ நேரடியாக தேர்வு செய்து பயன்படுத்த முடியும். ஒரே உரையாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட Skills-ஐ இணைத்தும் பயன்படுத்த முடியும்.
மேலும், பயனர் கேட்கும் கேள்விக்கு ஏற்ற Skill எது என்பதை Gemini தானாக அடையாளம் கண்டு பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் ஒரே மாதிரியான பணிகளை மீண்டும் மீண்டும் செய்யும் பயனர்களுக்கு நேரம் மிச்சமாகும்.ஏற்கனவே Gemini-யில் உருவாக்கப்பட்டுள்ள Gems-ஐ இழக்க வேண்டிய அவசியமில்லை. Google-ன் தகவல்படி, Gems அகற்றப்படும் நிலையில் அவை தானாக Skills-ஆக மாற்றப்படும். அவற்றின் பெயர், விளக்கம், தனிப்பயனாக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் ஆதரிக்கப்படும் பதிவேற்றப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட தகவல்கள் மாற்றத்தில் பாதுகாக்கப்படும்.
தனிப்பட்ட Google Account-களுக்கான Gemini-யில் Skills வசதி படிப்படியாக அறிமுகமாகி வருகிறது. Gems-இன் மாற்றத்துக்கான முக்கிய கட்டம் நவம்பர் 17, 2026 முதல் தொடங்குகிறது. Workspace கணக்குகளுக்கு Gems மாற்றம் பின்னர் நடைபெறும் என Google தெரிவித்துள்ளது.இதன் மூலம் Gemini-யில் தனிப்பயனாக்கப்பட்ட AI பணிகளை மேற்கொள்வது மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எழுதுதல், திட்டமிடுதல், மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய அலுவலகப் பணிகள் போன்றவற்றுக்கு Skills பயனுள்ளதாக இருக்கும்.