கூகுளின் அடுத்த பாய்ச்சல்... புதிய ஏ.ஐ அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு 17 அறிமுகம்!
சர்வதேசத் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் நிறுவனம், தனது அடுத்த தலைமுறை இயங்குதளமான 'ஆண்ட்ராய்டு 17' அப்டேட்டை செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளின் மேம்பட்ட ஏ.ஐ தொழில்நுட்பமான ஜெமினி, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் கட்டமைப்புடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களின் தேவைகளை முன்கூட்டியே கணித்து வேகத்தில் உதவிகளைச் செய்யும். தற்கால இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் சமூக வலைத்தள மோகத்தையும், மொபைல் போன் அடிமைத்தனத்தையும் கணிசமாகக் குறைக்கும் வகையில், 'இடைநிறுத்த புள்ளி' என்ற புதிய டிஜிட்டல் நல்வாழ்வு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களை ஏமாற்றிப் பணப் பறிப்பில் ஈடுபடும் போலி வங்கி அழைப்புகள் மற்றும் ஆன்லைன் மோசடி குறுஞ்செய்திகளை அதிநவீன ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் பாதுகாப்பு வசதிகள் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளன. உள்ளடக்க உருவாக்குநர்கள் எளிய முறையில் உயர்தரப் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களைத் தங்களது மொபைல் சாதனங்களிலேயே எடிட்டிங் செய்ய ஏதுவாகப் புதிய படைப்பாற்றல் கருவிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த அதிநவீன ஆண்ட்ராய்டு 17 அப்டேட்டானது, வரும் ஜூன் மாதம் முதல் முதற்கட்டமாகக் கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ரகச் சாதனங்களில் முறையில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.