அரசு, தனியார் ITI நேரடி சேர்க்கை - ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8-ம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இதில் சேரத் தகுதியானவர்கள்.

விரும்பும் தொழிற்பயிற்சிப் பிரிவைத் தேர்வு செய்யத் தகுதியான சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், புகைப்படங்கள் போன்றவை) நேரடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் ஐ.டி.ஐ நிலையங்களுக்குச் சென்று சேர்க்கை பெறலாம்.

அரசு ஐ.டி.ஐ-யில் சேரும் மாணவர்களுக்கு முழு தொழிற்பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்கு மாதந்தோறும் அரசின் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் சென்று வர இலவசப் பேருந்து பயண அட்டை வசதி அளிக்கப்படும்.

அரசு நடைமுறைகளின்படி இலவசச் சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு முன்னணித் தொழில் நிறுவனங்கள் மூலம் வளாக நேர்காணல் நடத்தப்பட்டுப் பணி வாய்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன.