குழந்தைகளைக் கண்டித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், மனைவிக்கு சராமாரி அடி!  

 

சென்னை ராஜமங்கலம் வடக்கு ஜெகநாதன் நகர் 1வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். 57 வயதான இவர் சென்னை போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பக்கத்து தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி அருண்பிரபுவின் இரண்டு மகன்கள் ரமேஷ் வசிக்கும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தச் சிறுவர்கள் மற்ற குழந்தைகளைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகத் தெரிகிறது.

இதனைப் பார்த்த ரமேஷ் அந்தப் பிள்ளைகளின் பாட்டியான லில்லியிடம் சென்று விபரத்தைக் கூறி குழந்தைகளைக் கண்டித்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் லில்லி இந்த விபரத்தை அப்படியே ரவுடி அருண்பிரபுவிடம் கொண்டு சேர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்பிரபு தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து மதுபோதையில் இரவு 10 மணி அளவில் ரமேஷ் வீட்டுக்கு விரைந்துள்ளார்.

அங்கு வாசலில் நின்ற ரமேஷை அந்த ரவுடிக் கும்பல் பயங்கரமாகத் தாக்கத் தொடங்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்து கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவி சுஜாதாவையும் அவர்கள் இரக்கமில்லாமல் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த தம்பதியர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இத்தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ராஜமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவுடி அருண்பிரபு மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர்.