48 மணி நேரத்தைக் கடந்த நீதிமன்றக் காவல்… அரசு ஊழியர்களுக்கு தானாகவே இடைநீக்கம்! உச்சநீதிமன்றம் விளக்கம்
அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்தால், அவர் தானாகவே இடைநீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்படுவார். இதற்காகத் தனியாக இடைநீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் சமஷ்டிபூரில் உள்ள அரசு சாதர் மருத்துவமனையின் நிர்வாகியாகப் பணியாற்றியவர் விஷ்வஜீத் சிங். ஒப்பந்த ஊழியர் ஒருவருக்கு வழங்க வேண்டிய ரூ.36,421 ஊதிய நிலுவையை விடுவிக்க ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், சுமார் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்தார்.
இந்த வழக்கில் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து விஷ்வஜீத் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மீண்டும் உறுதி செய்தது.
அதேநேரத்தில், 48 மணி நேரத்துக்கும் மேலான நீதிமன்றக் காவல் காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்பட வேண்டும் என்றும், பின்னர் இடைநீக்கத்தை ரத்து செய்து அதே மருத்துவமனையில் அதே பதவியில் மீண்டும் நியமித்தது குறித்து பீகார் அரசு ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்