அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ₹10,021 கோடி விடுவித்தது மத்திய அரசு!
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மற்றும் வீடற்ற மக்களுக்குப் பக்கா வீடுகளைக் கட்டித் தரும் நோக்கில் மத்திய அரசால் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் அடுத்தகட்ட கட்டுமானப் பணிகளை வேகப்படுத்துவதற்காக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் ₹10,021.42 கோடி நிதியை 'மதர் சாங்ஷன் முறையில் அதிகாரப்பூர்வமாக விடுவித்துள்ளார். வரும் மார்ச் 2029-ஆம் ஆண்டிற்குள் தகுதியுடைய அனைத்து ஊரகக் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான நிரந்தர வீடுகளை வழங்க வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் இந்த நிதி விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் 4.95 கோடி வீடுகளைக் கட்டுவதாகும். இதில் இதுவரை 3.91 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வீடுகளில் இதுவரை 3.05 கோடிக்கும் அதிகமான வீடுகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுப் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது விடுவிக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி, மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உதவும்.
மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த பெருந்தொகை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 மாநிலங்களின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. அந்தப் பட்டியலில் தமிழ்நாடு, அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 12 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "நாங்கள் வெறும் செங்கல் மற்றும் சிமெண்டைக் கொண்டு வீடுகளை மட்டும் கட்டவில்லை; மாறாக ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முழுமையான இல்லங்களை உருவாக்கி வருகிறோம்" என்று குறிப்பிட்டார். அதன்படி, இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் பின்வரும் அடிப்படை வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்படும்:
முறையான அணுகுசாலைகள் மற்றும் தெருக்கள், தடையில்லா மின்சார வசதி (சௌபாக்யா திட்டம் மூலம்), பாதுகாப்பான குடிநீர் இணைப்பு (ஜல் ஜீவன் இயக்கம் மூலம்), இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்பு (உஜ்வலா திட்டம் மூலம்), சுகாதாரமான கழிப்பறை வசதிகள் (தூய்மை பாரத இயக்கம் மூலம்).
இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, PMAY-G திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் சுமார் 75 சதவீத வீடுகள் பெண்களின் பெயரிலோ அல்லது குடும்பத் தலைவியுடன் இணைந்த கூட்டு உரிமையின் கீழோ பதிவு செய்யப்படுகின்றன. இது கிராமப்புறப் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தற்சார்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கும் வீடுகள் சென்றடைவதை உறுதி செய்ய, மாநில அரசுகள் தகுதியுடைய பயனாளிகளுக்கு இலவச நிலப் பட்டாக்களை வழங்க சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.