திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கலாம்... ஆளுநர் அர்லேகர்! 

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநிலத்தின் அரசியல் சூழல் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. 108 இடங்களைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு நிலையான அரசு அமைவதை உறுதி செய்யும் நோக்கில், பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா என்பது போன்ற ஆலோசனைகளை ஆளுநர் முன்வைத்ததாகத் தெரிகிறது.அதிமுக தரப்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் அதே வேளையில், திமுகவுடன் இணைந்து செயல்படுவது குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றன.

முன்னதாக எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாக அறிவித்த திமுக, தற்போது நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் முடிவெடுக்கத் தனது தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளது. விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பதில் இன்னும் தெளிவற்ற நிலை நீடிப்பதால், தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.