ஆளுநரின் 'மேஜிக் எண்' பிடிவாதம்... நீதிமன்றத்தை நாடுகிறதா தவெக? 1994 பொம்மை வழக்கின் தீர்ப்பு கைகொடுக்குமா? தமிழக அரசியலில் சட்டப் போர்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கட்டாயம் என ஆளுநர் மாளிகை கறார் காட்டி வரும் நிலையில், தவெக தரப்பு தற்போது சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தவெக மற்றும் காங்கிரஸ் இணைந்து 113 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் தாங்களே 'தனிப்பெரும் கூட்டணி' என விஜய் தரப்பு வாதிடுகிறது. "மெஜாரிட்டி இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் முடிவு செய்யக்கூடாது; சட்டசபையில் வாக்கெடுப்பின் மூலமே முடிவு செய்ய வேண்டும்" என்பதே விஜய்யின் முக்கிய வாதமாக உள்ளது.
ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 5 இடங்களே தேவைப்படுவதால், சட்டமன்றத்தில் அதை நிரூபிக்கத் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் தனது முடிவில் உறுதியாக இருப்பதற்குக் காரணங்களாக, பெரும்பான்மை இல்லாமல் பதவி ஏற்பது, சில நாட்களிலேயே அரசு கவிழ்வதற்கு வழிவகுக்கும். மீதமுள்ள 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற மற்ற கட்சிகளில் இருந்து ஆட்களை இழுக்க முயற்சி நடக்கும் என்பதால், அதைத் தவிர்க்கவே முன்னரே ஆதரவு கடிதத்தைக் கோருகிறார்.
1994-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய புகழ்பெற்ற 'எஸ்.ஆர். பொம்மை' வழக்கின் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தவெக திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒரு கட்சியின் பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையில் அல்ல, சட்டமன்றத்தின் தளத்தில் தான் நிரூபிக்க வேண்டும்.
இதைக் குறிப்பிட்டு, ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலோ அல்லது நேரடியாக உச்ச நீதிமன்றத்திலோ தவெக தரப்பு இன்று மாலை மனுத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.