டாஸ்மாக் கடைகளின் தூர வரம்பை அரசே மறுஆய்வு செய்யலாம் - உயர் நீதிமன்றம் கருத்து!

 

விதிமுறைப்படி தடை செய்யப்பட்ட தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், மதுக்கடைகளுக்கான தூர வரம்பை மாற்றுவது குறித்த கொள்கை முடிவை மாநில அரசே உரிய முறையில் மறுஆய்வு செய்யலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை பாரிமுனை, பிரகாசம் சாலை மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாகக் கூறப்படும் மதுக்கடைகளை மூடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதுகுறித்து தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டியது. தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் உள்ள கடைகளை இப்போது திடீரென மூட உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பொதுநலன் கருதி கடைகளுக்கான தூர வரம்புகளில் மாற்றங்களைச் செய்வது குறித்து தமிழக அரசே கொள்கை அளவில் முடிவெடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.