வடலூர் வள்ளலார் சர்வதேச மையத் திட்டத்தை ரத்து செய்தது தவெக அரசு!
கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த 'வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி வடலூர் சத்திய ஞானசபைப் பெருவெளியில் ரூ.100 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட இருந்தன.
ஆன்மிகப் பெருவெளியின் தொன்மையும் வழிபாட்டு முறைகளும் பாதிக்கப்படும் எனக் கூறி பக்தர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்னிலை வகித்த வழக்கறிஞர், ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.
சர்வதேச மையத்திற்குப் பதிலாக, சத்திய ஞானசபைக்குச் சொந்தமான 71.24 ஏக்கர் நிலப் பகுதியை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அதைச் சுற்றிச் சுற்றுச்சுவர் மட்டும் அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வள்ளலார் சர்வதேச மையத் திட்டம் கைவிடப்பட்டதாக அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களும் வள்ளலார் அடியார்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.