இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு - அரசாணை வெளியீடு!
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு வரன்முறைத் திட்டம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு விலை இல்லாமல் வீட்டுமனை பட்டா வழங்கும் இந்தச் சிறப்புத் திட்டம் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வசித்து வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்கள் ஆவர். அவர்களின் தகுதியின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முறையான பட்டா வழங்கப்படும்.
ஒருவேளை ஆட்சேபகரமான (Objectionable Poramboke) நிலங்களில் பொதுமக்கள் வசித்து வந்தால், அவர்களைப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றி மாற்று இடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசும் வருவாய்த்துறையும் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.