அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ₹7.5 லட்சமாக உயர்வு - புதிய அரசாணை வெளியீடு!

 

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அரசாணையை நிதித்துறைச் செயலாளர் சித்திக் வெளியிட்டுள்ளார். இதன்படி, இதுவரை ₹5 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகை தற்பொழுது ₹7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசால் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போதைய திட்டம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. புதிய காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: புதிய காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூன் 30, 2031 வரை அமலில் இருக்கும். 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் மூலமே இப்புதிய திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

சிறப்பு சிகிச்சைகளுக்கான அதிகபட்ச காப்பீட்டுத் தொகை தற்போதைய நடைமுறைப்படி ₹10 லட்சமாகத் தொடரும். இதுதவிர, 'கார்பஸ்' நிதியின் கீழ், அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ₹27 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெறலாம். இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பிரீமியத் தொகைக்கு மேல் கூடுதலாக வரும் செலவினங்களை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

இப்புதிய திட்டத்தின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ₹4,500 என்ற வீதத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அரசே பிரீமியம் செலுத்துகிறது. இதற்காக ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து ₹390 பிடித்தம் செய்யப்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு ₹7,728 என்ற வீதத்தில் அரசே பிரீமியம் செலுத்த உள்ளது. இதற்காக ஓய்வூதியர்களிடமிருந்து மாதம் ₹644 பிடித்தம் செய்யப்படும். இந்தத் தொகை வரும் ஜூலை மாத ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட உள்ளது.

குறைந்த ஊதியம் பெறும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு இப்புதிய திட்டத்தில் சிறப்புச் சலுகைகள் மற்றும் விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்றவர்களில் மாதச் சம்பளம் ₹10,000-க்கும் கீழ் உள்ளவர்களுக்கு முழு பிரீமியத் தொகையையும் அரசே செலுத்தும். இவர்களது சம்பளத்தில் இருந்து எவ்விதப் பிடித்தமும் செய்யப்படாது.

மேற்குறிப்பிட்ட பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களது ஓய்வூதியத்திலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படாது; மாறாக இவர்கள் அனைவரும் நேரடியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுப் பயன்பெறுவார்கள்.