'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' - பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியானது!

 

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்', தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனத் தமிழக தவெக அரசால் அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பசியின்றி மாணவர்கள் பாடம் கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு, இனி 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் இத்திட்ட விரிவாக்கம் நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயனடைவதுடன், ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு முழுவதும் சுமார் 34.36 லட்சம் மாணவர்கள் இக்காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறுவர். சமையலறை மற்றும் தேவையான உபகரணங்கள் தயாராக உள்ள பள்ளிகளில் செப்டம்பர் 17 முதலிலும், பிற பள்ளிகளில் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளும் திட்டம் முழுமையாகத் தொடங்கப்படும்.

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இத்திட்ட விரிவாக்கத்திற்கு ஆண்டுக்கு உத்தேசச் செலவினமாக ரூ.343 கோடியே 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான உணவளிப்புத் திட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளன.

ஏழை மாணவர்கள் கல்வி கற்க முதன்முதலில் 'மதிய உணவு திட்டத்தை' அறிமுகப்படுத்தினார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 1982-இல் இத்திட்டத்தை 'சத்துணவுத் திட்டமாக' விரிவுபடுத்தினார். கலைஞர் கருணாநிதி: சத்துணவுடன் வாரத்திற்கு முட்டை வழங்கும் முறையைக் கொண்டுவந்தார். மு.க.ஸ்டாலின்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குக் 'காலை உணவுத் திட்டத்தை' 2022-இல் தொடங்கி வைத்தார். தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இத்திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி, கல்விக்கு வித்திட்ட காமராஜரின் பெயரையே இத்திட்டத்திற்குச் சூட்டி கௌரவித்துள்ளது.