கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை ரத்து... சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு!
கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமன அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் ஏற்பட்ட துயரம்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதற்கான நியமன ஆணைகளைக் கரூரில் நடந்த விழாவில் தமிழக அரசு வழங்கியது.
அரசு வேலை வழங்கப்பட்டதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
"பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பணியிழந்த 31 பேரின் தரப்பு நியாயமான வாதங்களை உயர் நீதிமன்றம் கேட்காமல் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரியுள்ளது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.