ஏரியில் மூழ்கி உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் பெற்று முதலிடம்!
திருவள்ளூர் அருகே ஏரி நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவன் ஒருவன், நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியிலேயே முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையை அடுத்த அரியத்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் அபிஷேக் (15). இவன் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். அண்மையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்திருந்த மாணவன் அபிஷேக், தனது நண்பர்களுடன் சேர்ந்து கவரைப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளான்.
விளையாடி முடித்த களைப்பில், நண்பர்களுடன் சேர்ந்து அருகில் இருந்த பன்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக இறங்கியுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக ஏரியின் ஆழமான பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிய அபிஷேக், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்போதே அவனது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், உயிரிழந்த மாணவன் அபிஷேக் 500-க்கு 495 மதிப்பெண்கள் என்ற அசாத்திய மதிப்பெண்ணைப் பெற்று, தான் படித்த கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது தெரியவந்தது.
மாணவன் அபிஷேக்கின் இந்த இமாலயக் கல்விச் சாதனை ஒருபுறம் அவனது பள்ளிக்குப் பெருமையைத் தந்திருந்தாலும், அவனது இழப்பைத் தாங்க முடியாமல் பள்ளி ஆசிரியர்களும், சக மாணவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். மறைந்த மாணவனின் நினைவாக, அவனது புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் விவரங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.
பெற்றோரின் கனவை நனவாக்கி, மாநில அளவில் பேசப்படும் அளவுக்கு மதிப்பெண் எடுத்த மாணவன், இன்று தங்களோடு இல்லையே என அவனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் துயரத்திலிருந்து மீள முடியாமல் கதறித் துடிப்பது பார்ப்போரைக் கண் கலங்கச் செய்துள்ளது.