3 மாதங்களில் கோயில் பிரசாதங்களை அரசே தயாரித்து விற்கும் - அமைச்சர் ரமேஷ் உத்தரவு!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் மற்றும் விநியோக முறைகளில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் நோக்கில், வரும் 3 மாதங்களுக்குள் அனைத்து முக்கியக் கோயில்களிலும் பிரசாதங்களை அரசே நேரடியாகத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோயில் வளாகங்களுக்குள் செயல்பட்டு வரும் தனியார் பிரசாதக் கடைகளில் தரம் குறைவாக இருப்பதோடு, அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் பக்தர்கள் தரப்பிலிருந்து நீண்ட காலமாகப் புகார்கள் எழுந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி பிரசாதங்கள் அனைத்தும் அந்தந்த கோயில் வளாகத்திற்குள்ளேயே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்குக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வடை, முறுக்கு, லட்டு உள்ளிட்ட அனைத்து வகையான பிரசாதங்களின் அளவு, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் நாள் மற்றும் விலைப்பட்டியல் ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காக, கூடுதல் ஆணையர் தலைமையில் ஒரு உயர் மட்டத் தனிக்குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்குத் தரமான மற்றும் சுகாதாரமான பிரசாதம் நியாயமான விலையில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், ஆன்லைன் சேவைகளிலும் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் இணையதளங்கள் அனைத்தும் முழுமையாக மேம்படுத்தப்பட்டு, யாத்ரி நிவாஸ் மற்றும் பிற தங்கும் விடுதி அறைகளை ஆன்லைனில் எளிதாக முன்பதிவு செய்யும் வசதி உருவாக்கப்படவுள்ளது.
குறிப்பாக, பக்தர்கள் வெவ்வேறு பக்கங்களுக்குச் செல்லத் தேவையில்லாதவாறு ஒரே இணையப் பக்கத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், தங்கும் அறை முன்பதிவு மற்றும் பிற சேவைகளை ஒருங்கிணைக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவற்றுடன், முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், உள்ளூர் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்புத் தரிசன ஏற்பாடுகளைச் செய்யவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயில்களில் நடைபெறும் தேரோட்டம், கும்பாபிஷேகம் மற்றும் தெப்பத் திருவிழா போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை உச்சகட்டமாகப் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தேரோட்டத்தின் போது, தேர்ச் சக்கரங்களுக்கு அருகில் பக்தர்கள் செல்லாமல் தடுக்கப் போதிய தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கும் வகையில், இனி திருவிழாக்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயில்களில் நிலுவையில் உள்ள பழைய ஏல நடைமுறைகளை ரத்து செய்து, புதிய வழிகாட்டுதல்களின்படி மறு ஏலம் நடத்தவும், கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோயில்களில் தற்போது நடைமுறையில் உள்ள 'ஒரு கால பூஜையை' சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப 'முக்கால பூஜையாக' மாற்ற ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களின் உள்கட்டமைப்பு மற்றும் கழிவறைத் தூய்மைக்கும் முன்னுரிமை அளித்து திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.