ரேஷனில் ஊட்டச்சத்துமிக்க பொருட்கள் - தவெக அரசு திட்டம்!
தமிழகத்தில் அனீமியா (இரத்த சோகை) மற்றும் வைட்டமின் குறைபாடுகளை ஒழிக்கும் நோக்கில், ரேஷன் கடைகள் மூலம் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களை விநியோகிக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மத்தியில் அனீமியா (இரத்த சோகை), வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகள் பெரும் ஆரோக்கிய சவாலாக உள்ளன. இதனைத் தடுக்கும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் தரமான ஊட்டச்சத்துமிக்க உணவுப் பொருட்கள் வழங்கப்படும் எனத் த.வெ.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
தற்போது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த புதிய ஊட்டச்சத்து திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ரேஷன் கடைகள் மூலம் பின்வரும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரத்த சோகையைப் போக்கக்கூடிய இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் ஆகியவை சேர்க்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தடையின்றி வழங்கப்பட உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி நிறைந்த செறிவூட்டப்பட்ட சமையல் எண்ணெய் ரேஷனில் விநியோகிக்கப்பட உள்ளது. இது கண் பார்வை குறைபாடு மற்றும் எலும்பு பலவீனத்தைத் தடுக்க உதவும்.
இதேபோல், அத்தியாவசிய நுண் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் சேர்க்கப்பட்ட செறிவூட்டப்பட்ட கோதுமை மாவும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.
ஏழை எளிய மக்களுக்குச் சத்தான உணவுகள் மலிவு விலையிலும், இலவசமாகவும் கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இதற்கான ஆரம்பகட்ட தயாரிப்புப் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த கோப்புகளை அதிகாரிகள் தயார் செய்து வருவதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகும் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. த.வெ.க அரசின் இந்த மக்கள் நல ஆரோக்கிய திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.