சென்னையில் பிரம்மாண்டம்... 5000 பெண்கள்... நடிகர் தனுஷுடன் மகளிர் அணி சந்திப்பு!

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை முறைப்படுத்தி அகில இந்திய நற்பணி மன்றமாக மாற்றிய பிறகு, முதல்முறையாக சென்னையில் பிரம்மாண்டமான முறையில் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சியை இன்று நடத்துகிறார். இதற்காகச் சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட மேடை மற்றும் அரங்கப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து, விழாக்கூடம் தயார் நிலையில் உள்ளது.

சமீபகாலமாக நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்றங்களுக்கு மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாகப் புதிய நிர்வாகிகளை நியமித்து அமைப்பை பலப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல்களும், அல்லது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இணையக்கூடும் என்ற பல்வேறு கருத்துகளும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் தனுஷை வெளிப்படையாகவே தங்கள் கட்சிக்கு அழைத்துள்ள சூழலில், தனுஷின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் ஆர்வத்தையும் உற்றுநோக்கலையும் ஏற்படுத்தியுள்ளன.

இன்று நடைபெறும் இந்த முக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தரவுள்ள 5,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் மகளிர் அணி உறுப்பினர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும், மதிய விருந்தும் வழங்க நற்பணி மன்றத்தின் சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்:திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள இந்த திடீர் மகளிர் அணி சந்திப்பில், நடிகர் தனுஷ் நேரில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அப்போது தனது அடுத்தகட்ட நற்பணிகள் மற்றும் அரசியல் பிரவேசம் குறித்தோ அல்லது பரவி வரும் செய்திகளுக்கோ விளக்கமளிப்பாரா என்ற பலத்த எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்களும் பொதுமக்களும் காத்துக் கிடக்கின்றனர்.