ரூ30 கேட்டு தரல... பாட்டியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த பேரன்!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கரட்டுவளவு பகுதியில் வசித்து வருபவர் கந்தாயி . இவரது மகன் சுப்பிரமணி மற்றும் மருமகள் கன்னியம்மாள் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதனால் இவர்களது 16 வயது மகன், தனது பாட்டியான கந்தாயி ஆதரவில் வாழ்ந்து வந்தான். 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட அந்தச் சிறுவன், தாத்தா கந்தசாமியின் பெயரில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் தனது பாகத்தைப் பிரித்துத் தருமாறு பாட்டியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.
நிலத்தைப் பிரித்துத் தர பாட்டி கந்தாயி மறுத்து வந்த நிலையில், நேற்று மாலை செலவிற்காகப் பேரன் 30 ரூபாய் பணம் கேட்டுள்ளான். அதற்கும் பாட்டி மறுப்புத் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன் அருகில் இருந்த கட்டையை எடுத்து கந்தாயியின் பின்மண்டையில் பலமாக அடித்துள்ளான். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாட்டியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனைப் பார்த்த உறவினர் அபிஷேக், படுகாயமடைந்த முதியவரை மீட்டு இருசக்கர வாகனத்தில் இடைப்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கந்தாயி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனிடையே பாட்டியைக் கொன்ற சிறுவன் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் நேராகச் சென்று சரணடைந்தான். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.