கல்யாணம் ஆகி 23 நாள் தான் ஆச்சு..  பட்டாசு விபத்தில் கணவனை இழந்த சோகம்..  கதறித் துடித்த இளம்பெண்..!

 
தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் திருமணமான 21 நாட்களிலையே இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் வந்திருந்தன. அட்டை பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை ஒவ்வொன்றாக இளைஞர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்படி பட்டாசுப் பெட்டிகளை இறக்கும்போது அவற்றிலிருந்த பட்டாசுகள் சில வெடித்ததில், தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறையைச் சேர்ந்த கிரி, பிரகாஷ், திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளை குட்டை கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ், சந்தோஷ், கள்ளக்குறிச்சி மாவட்டம் எடக்கல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், வசுந்தராஜ், அப்பாஸ்; ஒசூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், தருமபுரி மாவட்டம் டி. அம்மாபேட்டையைச் சேர்ந்த வேடப்பன், முனிவேல், இளம்பரிதி, ஆகாஷ், ஆதிகேசவன், விஜயராகவன் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக பட்டாசு கடை உரிமையார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஒரே கிராமத்தில் ஏழு பேர் இறந்தனர். தருமபுரி மாவட்டம், டி. அம்மாபேட்டையை சேர்ந்த வேடப்பன், முனிவேல், இளம்பரிதி, ஆகாஷ், ஆதிகேசவன், விஜயராகவன் உள்பட மொத்தம் 7 பேர் இறந்துள்ளனர். இதில் வேடப்பன் திருமணன் ஆன 21 நாளில் இறந்துள்ளார். பி.எட். படித்துள்ள அவர், தனது கல்லூரி காதலியை கடந்த மாதம் 17ம் தேதி கல்யாணம் செய்திருக்கிறார். தீபாவளி திருவிழா நெருங்கியுள்ளதால் சீசன் வேலைக்காக பட்டாசு குடோனுக்கு நண்பர்களுடன் வேலைக்கு சென்ற நிலையில் விபத்தில் சிக்கி இறந்துள்ளார். கல்யாணம் ஆகி 21 நாட்களே ஆன நிலையில், காதல் கணவனை இழந்த வேடப்பனின் மனைவி கதறி அழுத சம்பவம் நெஞ்சத்தை கனத்துள்ளது.

இதுக்குறித்து வேடப்பனின் தந்தை கூறும் போது, " என் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். கடந்த மாதம் தான் இரு குடும்பத்தினரும் இணைந்து பேசி கல்யாணம் செய்து வைத்தோம். அவன் வேலை செய்வதற்காக இங்கு வரவில்லை. நண்பர்கள் அழைத்தார்கள் என்பதால் இங்கு வந்தான். ஞாயிறு அன்று ஊருக்கு வந்துவிடுவதாக கூறியிருந்தான்.அதற்குள் இப்படி ஆகிவிட்டது. எனது மருமகள் இந்த துயரத்தை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள் என்று நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது," என்றார் .