23-வது மாடியில் இருந்து தவறிய மகன்... காப்பாற்ற சென்ற தந்தையும் பலி!  

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 23-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தந்தையும் 11 வயது மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள மகாகுன் மைவுட்ஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் 40 வயதான ரந்தீப் பத்ரா. இவரது மகன் ஆரவ், 11. கடந்த அக்டோபர் 30-ம் தேதி அதிகாலை இருவரும் வீட்டின் பால்கனியில் பூஜைக்காகப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஏணியில் நின்று பூக்களைப் பறித்த சிறுவன் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் தனது பிடியை இழந்து 23-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்கிடமான அம்சங்கள் எதுவும் தெரியவில்லை என்றும், இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.