"பச்சைத் துரோகம்... இயற்கை வளங்களை அழிப்பதை அனுமதிக்கக் கூடாது!” - சீமான் ஆவேசம்
"தொழில் வளர்ச்சி என்ற போலிப் பெயரில் இயற்கையை அழிப்பது வருங்கால தலைமுறைக்கும், இந்த பூமியில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் செய்யும் பச்சைத் துரோகம்" என்று சீமான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் மிக ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொழில் நிறுவனங்களின் பெருக்கத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துச் சீமான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். "இன்றைய காலகட்டத்தில் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்ற பெயர்களைத் தாங்கி, நமது நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு மற்றும் கடல் போன்ற ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் தொடர்ந்து மாசுபடுத்தி, அவற்றை முற்றிலும் அழித்தொழிக்கும் பேராசைச் செயல்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது."
"தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன ஆலைக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பது, சுயநலத்திற்காகக் காடுகளை ஒட்டுமொத்தமாக அழிப்பது, கனிமவளக் கொள்ளைக்காக மலைகளை வெட்டித் தரைமட்டமாக்குவது மற்றும் சட்டவிரோத ஆற்று மணல் சுரண்டல் போன்ற கொடூரமானச் செயல்கள் யாவும், இந்த பூமியில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும், நமது வருங்காலத் தலைமுறையினருக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய பச்சைத் துரோகமாகும்" எனச் சீமான் சாடியுள்ளார்.
"இயற்கையாக வளர்ந்து நமக்கு ஆக்சிஜன் தரும் மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டு, பின்னர் கோடி கோடியாகப் பணம் செலவழித்துக் 'கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்' கொண்டு வருவதும், தொழிற்சாலைகளால் ஒட்டுமொத்த காற்றையும் மாசுபடுத்திவிட்டு, பின்னர் 'நல்ல காற்றை விலை கொடுத்து வாங்குவதும்' முற்றிலும் மூடத்தனமான, அறிவுக்குப் புறம்பான செயல்பாடுகள் ஆகும். இயற்கையைத் தக்கவைப்பதே உண்மையான வளர்ச்சி" என அவர் குறிப்பிட்டுள்ளார்.