மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் பசுமைச் சிலைகள்!
வரும் செப்டம்பர் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள விளாச்சேரியில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத 'பசுமை விநாயகர் சிலைகள்' தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விளாச்சேரி கண்மாய்க் களிமண், ஆற்று மணல் மற்றும் யானைச் சாணம் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி மண்பாண்டக் கலைஞர்கள் சிலைகளைச் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு காமதேனு, நந்திகேஸ்வரர், சேஷ வாகனம், கருட வாகனம் மற்றும் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் புதிய ரக விநாயகர் சிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர் ஒருவரின் சிறப்பு வேண்டுகோளுக்கிணங்க, 'கருப்பு' திரைப்பட பாணியில் கையில் அரிவாளுடன் கூடிய விநாயகர் சிலையும் இம்முறை செய்யப்பட்டுள்ளது. 3 அடி முதல் 8 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு அடிக்கு ரூ. 3,500 வரை கூலி பெறப்படுகிறது.
நீர்நிலைகளை மாசுபடுத்தும் ரசாயன கலவைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் சிலைகளால், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைச் சிலை தயாரிப்புத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. எனவே, ஆபத்தான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி சிலைகள் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளாச்சேரி மண்பாண்டக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.