விஜய் பிரசாரத்திற்கு 'கிரீன் சிக்னல்'.. மார்ச் 30ல் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பெரம்பூரில் தொடக்கம்!  

 

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் மார்ச் 30-ஆம் தேதி முதல் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். முன்னதாகப் பிரசார இடத்திற்கு அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, அவர் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்த நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

மார்ச் 26ம் தேதியே பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் சந்திப்பில் பிரசாரம் செய்ய தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், திடீரென அந்த இடத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் பிரசாரம் தடைபடும் சூழல் உருவானதால் தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்தச் சிக்கல் குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தலைமைச் செயலகத்தில் விஜய் நேரில் சந்தித்து முறையிட்டார். மாநகராட்சியின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும், முறையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் மனு அளித்தார். இதனைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்போது பிரசாரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மார்ச் 30ம் தேதி மதியம் பெரம்பூர் தொகுதியில் விஜய் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். மனுத் தாக்கல் செய்த கையோடு, பெரம்பூர் தொகுதியில் இருந்தே தனது முதல் தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். பெரம்பூரைத் தொடர்ந்து அன்று மாலையே வில்லிவாக்கம் தொகுதியிலும் அவர் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிக்க உள்ளார்.

திரைப்படங்களில் இருந்து விலகி முழுநேர அரசியலில் இறங்கியுள்ள விஜய்யின் முதல் பிரசாரம் என்பதால், பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது வருகையை முன்னிட்டு தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.