GTA 6 கேம் வெளியீட்டு நாளில் பள்ளிக்கு வந்தால் ரூ.8,600 பரிசு! இங்கிலாந்து பள்ளிகள் அறிவிப்பு
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' (GTA 6) வீடியோ கேம் வெளியீட்டை முன்னிட்டு, மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பதைத் தடுக்க இங்கிலாந்தில் உள்ள 2 பள்ளிகள் வித்தியாசமான பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளன.
வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள பெல்பாஸ்ட் பாய்ஸ் மாடல் பள்ளி, நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தவறாமல் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்காக குலுக்கல் போட்டியை அறிவித்துள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவருக்கு 70 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,600) மதிப்புள்ள பிளேஸ்டேஷன் அல்லது எக்ஸ்பாக்ஸ் பரிசு கூப்பன் வழங்கப்படும்.
அதேபோல், இங்கிலாந்தின் கவுண்டி டர்ஹாம் பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கத்தோலிக்க பள்ளி, நவம்பர் 19-ம் தேதி முழு நாளும் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 65 பவுண்டுகள் (சுமார் ரூ.8,000) மதிப்புள்ள அமேசான் பரிசு கூப்பன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
GTA 6 விளையாட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்பதால், அதையே பரிசாக வழங்க முடியாது என பெல்பாஸ்ட் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் கணிதத் தேர்வும் இந்த நாட்களில் நடைபெறுவதால் பள்ளி வருகையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.