24 தங்கப் பதக்கங்கள்! கோவா சிலம்பப் போட்டியில் அசத்திய குடியாத்தம் மாணவர்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்று 24 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம், உடல் வலிமை மட்டுமின்றி வேகம், சுறுசுறுப்பு, கவனம் மற்றும் மன ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் கலையாக உள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் சிலம்பப் பயிற்சிக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்திய அவர்கள், அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதில் 21 மாணவர்கள் ஒற்றை சிலம்பப் போட்டியிலும், 3 மாணவர்கள் இரட்டை சிலம்பப் போட்டியிலும் முதலிடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்கள் குடியாத்தம் திரும்பியபோது, அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து வெற்றி பெற்ற மாணவி ஒருவர் கூறுகையில், சிலம்பம் பெண்களுக்கும் சிறந்த தற்காப்புக் கலையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சிலம்பப் பயிற்சி உதவுவதாக கூறினார்.
கோவா போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக நடைபெற உள்ள ஆசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெறுவதற்காக தற்போது பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.குடியாத்தம் மாணவர்களின் இந்த சாதனைக்கு பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.