நீளமான கூந்தல் வளர்த்து இந்திய இளம்பெண் கின்னஸ் சாதனை!

 

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியல் என்பவர், உலகின் மிக நீளமான கூந்தலைக் கொண்ட பெண் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ரேணுவின் கூந்தல் 271.50 சென்டிமீட்டர் (8 அடி 10 அங்குலம், கிட்டத்தட்ட 9 அடி) நீளம் கொண்டது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அவரது கூந்தலின் நீளம் முறைப்படி அளவிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், இதற்கு முன்பு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அலியா நசிரோவா வசமிருந்த கின்னஸ் சாதனையை ரேணு முறியடித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனது கூந்தலை வெட்டாமல் ரேணு தொடர்ந்து வளர்த்து வருகிறார். எந்தவிதமான விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களோ அல்லது சிறப்புச் சிகிச்சைகளோ இன்றி, இயற்கையான மூலிகைகள், பொறுமை மற்றும் தொடர் பராமரிப்பு மூலமாகவே இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பாரம்பரியத்தில் நீண்ட கூந்தல் அழகு மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படுவதால், அதனைத் தொடர்ந்து வளர்க்க ஊக்கம் பெற்றதாக ரேணு பெருமிதத்துடன் கூறியுள்ளார்.