திருமண விருந்தால் விபரீதம்... 200 பேர் வாந்தி , மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதி!
குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 400-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திருமணத்தில் ஆசை தீர விருந்து சாப்பிட்டு விட்டு வீடு திரும்பியவர்களுக்கு, இரவு 11 மணியளவில் அடுத்தடுத்து வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் 60 பேருக்கு மட்டும் பாதிப்பு தெரிந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் 150 முதல் 200 பேர் வரை சிகிச்சைக்கு வரக்கூடும் எனத் தகவல் கிடைத்ததால், மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் மற்றும் அவசரகால மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உணவு விஷமானதே (Food Poisoning) இந்த பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திருமண வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விருந்தில் பரிமாறப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சமைக்கப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஆகியவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சியாகத் தொடங்கிய திருமண விழா, நள்ளிரவில் 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தால் சோகத்தில் முடிந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் இப்போதும் பரபரப்பான சூழலே நிலவுகிறது.