வளைகுடா போர் பதற்றம்: சிக்கிய இந்தியர்களை மீட்கும் 'மெகா' ஆபரேஷன்!

 

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரும் பணியில் மத்திய அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அசீம் மகாஜன் இதுகுறித்துத் தெரிவிக்கையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் தற்போது வரை சுமார் 9.84 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளிலிருந்து பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

போர் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து மற்றும் கடல்வழிப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிறப்பு விமானங்கள் மற்றும் மாற்றுப் பாதைகள் மூலம் இந்தியர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்காக டெல்லியில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, இந்தியத் தூதரகங்கள் மூலம் மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.