100 மீட்டர் ஓட்டத்தை 10.09 வினாடிகளில் கடந்து குரிந்தர்வீர் சிங் சரித்திர சாதனை.. குவியும் வாழ்த்துகள்!

 

இந்தியத் தடகள விளையாட்டு உலகமே வியந்து பார்க்கும் வகையிலான ஒரு பிரம்மாண்ட வரலாற்றுச் சாதனை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தடகள கூட்டமைப்பு கோப்பை தொடரில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அதிவேக புயல் குரிந்தர்வீர் சிங் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இப்போட்டியில் இலக்கை வெறும் 10.09 வினாடிகளில் கடந்து, இந்தியத் தடகள வரலாற்றிலேயே 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடி முடித்த முதல் இந்திய வீரர் என்ற இமாலய தேசிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். ராஞ்சியில் உள்ள புகழ்பெற்ற பிர்சா முண்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த 100 மீட்டர் இறுதிப்போட்டி, ரசிகர்களிடையே அசாத்திய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பந்தயம் தொடங்கிய அடுத்த சில நொடக்ளிலேயே, மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த பஞ்சாபின் 25 வயது இளம் தடகள வீரர் குரிந்தர்வீர் சிங், பந்தய தூரத்தை மிகத் துல்லியமாக 10.09 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார்.

இதற்கு முன்னதாக, இந்திய வீரர்கள் யாரும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10.10 வினாடிகள் என்ற மைல்கல்லைத் தாண்டியதே இல்லை என்ற நீண்டகால சாதனையைத் தனது அசாத்திய கால்களின் வேகத்தால் குரிந்தர்வீர் சிங் தற்பொழுது தகர்த்தெறிந்துள்ளார். இப்போட்டியில் ஒடிசாவின் அனிமேஷ் குஜூர் 10.20 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், பிரணவ் பிரமோத்  10.29 வினாடிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்த தடகள கூட்டமைப்பு கோப்பை தொடரில் தேசிய சாதனை என்பது கடந்த 24 மணி நேரத்திற்குள் 3 முறை கைமாறி இந்தியத் தடகள உலகை விறுவிறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரையிறுதி சுற்றில் குரிந்தர்வீர் சிங் 10.17 வினாடிகளில் கடந்து முதன்முறையாகத் தேசிய சாதனையைப் படைத்தார்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றில், ஒடிசா வீரர் அனிமேஷ் குஜூர் 10.15 வினாடிகளில் இலக்கை எட்டி குரிந்தர்வீரிடமிருந்து தேசிய சாதனையைத் தன்வசப்படுத்தினார். இந்த சவாலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்ட குரிந்தர்வீர் சிங், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10.09 வினாடிகள் என்ற அசாத்திய உலகத்தார நேரத்தைக் குறித்து, அனிமேஷிடமிருந்து சாதனையை மீட்டு 'இந்தியாவின் அதிவேக மனிதன்' என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டார்.

ரிலையன்ஸ் பவுண்டேஷன் மையத்தில் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியர் என்பவரின் கீழ் தீவிரப் பயிற்சி பெற்று வரும் குரிந்தர்வீர் சிங், இந்த அசுர வேகத்தின் மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஸ்காட்லாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ தகுதி வரம்பையும் எளிதாகக் கடந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.