குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 377 திருமணங்கள்!
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று அதிக அளவில் திருமணங்கள் நடைபெற உள்ளன. மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இதுவரை 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. முன்பதிவுகள் தொடர்ந்து திறந்திருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தேவஸ்வம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமண நிகழ்வுகள் தங்குதடையின்றி நடைபெற வசதியாக காலை 4 மணி முதலே திருமணங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்காக 6 மேடைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும் மணமக்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் உள்பட மொத்தம் 24 நபர்கள் மட்டுமே திருமண மேடை அருகில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கூடுதல் கோயில் பணியாளர்கள், பாதுகாப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்கள் மற்றும் திருமணத்திற்கு வருபவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி சுமுகமான முறையில் நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க தேவஸ்வம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேபோல் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று மேலும் 295 திருமணங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.