குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 426 திருமணங்கள்!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆவணி மாத முகூர்த்த நாட்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகையும் மிக அதிகமாக இருக்கும் என்பதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் கோயிலின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களில் திருமணங்களை தடையின்றி நடத்தவும், பக்தர்களின் வசதிக்காகவும் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆவணி மாத முகூர்த்த நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் 426 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. மேலும் எதிர்வரும் முக்கிய முகூர்த்த நாட்களிலும் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்குத் திருமணம் நடத்த முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் அதிகாலை 4 மணி முதலே கோயில் நடை திறக்கப்பட்டுத் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக மொத்தம் 6 பிரத்யேக மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதால் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி மணமக்களுடன் புகைப்படக் கலைஞர்கள் உள்பட 24 பேர் மட்டுமே மண்டபத்திற்கு அருகில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் கோயிலில் வழக்கமாகச் செய்யப்படும் அங்கப்பிரதட்சணம் செய்ய இந்த நாட்களில் அனுமதி கிடையாது எனவும், கிழக்கு நுழைவாயில் முழுவதுமாக ஒருவழிப் பாதையாக மாற்றப்படும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.