“திமுக மிகப்பெரிய தோல்வியைத் தழுவப் போகிறது... தமிழகத்திற்கு இது வாழ்வா சாவா தேர்தல்’ - எச்.ராஜா பேட்டி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தற்போதைய திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்தத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் எனத் தெரிவித்தார்.“தமிழக மக்கள் திமுக-வின் கடந்த காலச் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளும் தரப்பிற்குப் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமையப் போகிறது. திமுக மிகப்பெரிய அளவில் தோல்வியைத் தழுவுவது உறுதி” என அவர் குறிப்பிட்டார்.
இது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் என அவர் வர்ணித்தார். திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைத்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்ற கேள்விக்கு, “யார் ஓட்டுப் பிரிந்தாலும், தேசியச் சிந்தனை கொண்டவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்” எனத் தந்திரமாகப் பதிலளித்தார்.மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைந்துள்ளதாகவும், பிரதமர் மோடியின் கரத்தைப் பலப்படுத்தத் தமிழக மக்கள் இந்த முறை பாஜக கூட்டணிக்கு அமோக ஆதரவு வழங்குவார்கள் என்றும் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.