பாதியிலேயே கருகிய கனவு... 'நீட்' தேர்வு பயத்தால் 20 வயது மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
டாக்டராக வேண்டும் என்ற கனவோடு போராடிய ஒரு இளம் உயிர், தேர்வு பயத்தால் பாதியிலேயே பிரிந்துள்ள சோகம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மகள் வித்யா (20), பிளஸ் 2 முடித்த கையோடு மருத்துவப் படிப்பிற்காகத் தயாராகி வந்தார். ஏற்கனவே மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் அதில் வெற்றி பெறாததால், வித்யா கடந்த சில மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
அடுத்த மாதம் மே 3-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த வித்யா, அதற்காகத் தீவிரமாகப் படித்து வந்தார். இருப்பினும், "இந்த முறையும் தோற்று விடுவோமோ?" என்ற பயம் அவரை விடாமல் துரத்தியுள்ளது. இந்த நிலையில், யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு வித்யா தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த அபிராமபுரம் போலீசார், வித்யாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 17-ம் தேதி வித்யா கத்தியால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரைப் பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். அந்தச் சம்பவம் நடந்து மூன்று நாட்களிலேயே மீண்டும் அவர் தற்கொலை செய்துகொண்டது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தேர்வுக்காகப் பிள்ளைகள் தங்களின் பொன்னான உயிரை மாய்த்துக் கொள்ளும் போக்கு சமூக ஆர்வலர்களை வேதனை அடையச் செய்துள்ளது.