கைப்பையைத் தவறவிட்டது போல் நடித்துக் கணவரைக் காதலனுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற மனைவி !
கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரி தாலுகா தேவதாசனபள்ளியைச் சேர்ந்த 35 வயது ரமேஷ் என்பவர் ஓசூரில் தங்கித் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி 30 வயது ஹாசினி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போயனபள்ளியைச் சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மவுனிகா என்ற மகள் உள்ள நிலையில் கடந்த 13ஆம் தேதி ஹாசினி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் 14ஆம் தேதி மதியம் மல்லப்பா மலையில் உள்ள கோயிலுக்குச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் ஹாசினியின் தாய் ருக்கம்மா ரல்லபுதுகுரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் ரமேஷ் மலைக்கோயில் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஹாசினிக்கும் போயனபள்ளியைச் சேர்ந்த யுகேந்தர் என்ற நபருக்கும் இடையே சிறுவயது முதலே கள்ளக்காதல் உறவு இருந்து வந்ததாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் ரமேஷுக்குத் தெரியவந்ததால் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட ஹாசினி சம்பவத்தன்று மல்லப்பா மலையில் ஏறும் போது மூன்றாவது வளைவில் தனது கைப்பையைக் கீழே தவறவிட்டது போல் நாடகமாடியுள்ளார்.
இதனை அறியாத ரமேஷ் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுப் பையை எடுக்கச் சென்ற போது அங்கு மறைந்திருந்த யுகேந்தர் மற்றும் 3 பேர் ரமேஷைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். பின்னர் ரமேஷின் வாகனத்திலேயே யுகேந்தர் தனது காதலி ஹாசினி மற்றும் குழந்தை மவுனிகாவை அழைத்துக் கொண்டு தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள யுகேந்தர், ஹாசினி, மவுனிகா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 பேர் ஆகியோரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.