சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ் பீதி... 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!

 

உலக நாடுகளைக் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது எலிகள் மூலம் பரவக்கூடிய ‘ஹண்டா’ வைரஸ் பாதிப்பு சுற்றுலா கப்பல் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவிலிருந்து ஆப்பிரிக்கா நோக்கி 150 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ‘எம்.வி. ஹோண்டியஷ்’ என்ற சொகுசு கப்பலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் தற்போது மேல் சிகிச்சைக்காக நெதர்லாந்து நாட்டுக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர வைரஸ் பாதிப்பால் அந்தச் சொகுசு கப்பலில் பயணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது மனைவி என அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. மேலும் 5 பயணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதால் கப்பலில் உள்ள பயணிகள் அனைவரும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போது அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள இந்தக் கப்பலில் உள்ள மற்ற பயணிகளின் ஆரோக்கிய நிலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். எலிகளின் கழிவுகள் மற்றும் உமிழ்நீர் மூலம் மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ், கடுமையான காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. மற்ற பயணிகளுக்குத் தொற்று பரவாமல் தடுக்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும் சர்வதேச சுகாதார அமைப்புகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.