அண்ணாமலைக்கு நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் வாழ்த்து!

 

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழகத்தின் முன்னணி இளம் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. அண்ணாமலைக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பாஜாகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி, இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ள பரபரப்பான சூழலிலும், தங்களது பழைய அரசியல் நட்பைப் பாராட்டும் விதமாக நயினார் நாகேந்திரன் இந்த வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர், அன்புச் சகோதரர் திரு. கே. அண்ணாமலை அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் சிறந்த ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும், எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ததை டெல்லி தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், நயினார் நாகேந்திரன் தனது பதிவில் அண்ணாமலையை "முன்னாள் மாநில தலைவர்" எனக் குறிப்பிட்டு வாழ்த்தியிருப்பது, அண்ணாமலையின் பாஜாக விலகல் 100% உறுதியான ஒன்று என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளை தமிழ்நாடு திரும்பியவுடனேயே அண்ணாமலை தனது புதிய பிராந்தியக் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அவரது ஆதரவாளர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு இணையத்தில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.