பர்த் டே ட்ரீட்.. ஜூன் 22ல் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார் விஜயபாஸ்கர்!

 

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தவெகவில் இணையவுள்ளதான தகவல்கள் இறக்கை கட்டியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. அதனைத் தொடர்ந்து, மே 13 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற புதிய அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமைக்கு எதிராகச் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் ஒரு அதிருப்தி குழு உருவானது.

இந்த அதிருப்தி குழுவில் இருந்த சி.விஜயபாஸ்கர் உட்பட 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள், கட்சித் தலைமையை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க முயன்றது. இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகிய 4 எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல், இன்று காலை சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… 'அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு'. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?"

இந்தப் பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்ற அவர், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் தனது எம்.எல்.ஏ பதவிக்கான ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்கினார். அவரது கைப்பட எழுதப்பட்ட கடிதம் சட்டசபை விதிகளின்படி சரியாக இருந்ததால், அதனைச் சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின் ஆடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்ட சி.விஜயபாஸ்கர், "இது முடிவல்ல... ஒரு புதிய தொடக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவிலிருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ-வான இவர், தவெக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்-யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தவெக மற்றும் அவரது ஆதரவாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சி.விஜயபாஸ்கரின் இந்த அடுத்தகட்ட நகர்வு புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் டெல்டா பகுதிகளில் அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், தவெகவின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.